

ராமேசுவரத்தில் மலேரியா அலுவலகம் மூடப்பட்டதை கண்டித்தும், அந்த அலுவலகத்தை கண்டுபிடித்துத் தரக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
தமிழகத்தில் மலேரியா காய்ச்சல் அதிகம் இருக்கின்ற இடங்களில் ராமேசுவரம் தீவும் ஒன்று. அதனால் பல ஆண்டுகளாக ராமேசுவரம் மேலத்தெருவில் மலேரியா அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இங்கு மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படும். மேலும் மலேரியா தடுப்புப் பணியாளர்களால் கொசு மருந்து தெளிப்பது, கிணறு மற்றும் நீர்நிலைகளில் மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவ்வலுவலகம் மூடப்பட்டது. மலேரியா ரத்த பரிசோதனை செய்ய மட்டும் ஒரு ஆய்வக பரிசோதகரை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நியமித்தது.
ராமேசுவரத்தில் மலேரியா அலுவலகம் மூடப்பட்டதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) ராமேசுவரம் அஞ்சல் நிலையத்தில் இருந்து பேரணியாக நோயாளிகள் போல் போர்வை போர்த்திக் கொண்டும், கையில் கொசுவத்தி ஏந்திக் கொண்டும் காணாமல் போன மலேரியா அலுவலகத்தை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல், மாவட்டக்குழு உறுப்பினர் வடகொரியா, தாலுகா துணைச் செயலாளர் காளிதாஸ், நகர் செயலாளர் நந்த கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.