

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பகலிலேயே மேகமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் முகப்பு விளக்கை மெதுவாக வாகனங்கள் பயணித்தன.
கொடைக்கானலுக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடை சீசனில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும் நிலையில் மிதமான குளிர் சீதோஷண நிலையில் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அதிக குளிர் நிலவும் சீசனில் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்து மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வருகை தருகின்றனர். வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய வேளையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் மழைப்பொழிவு இருந்தது.
ஆனால் தற்போது மழைப்பொழிவு குறைந்து அவ்வப்போது சாரல் மழையே பெய்த வரும் நிலையில் தற்போது குளிர் நிலவுகிறது. இதனால் பகலிலேயே சாலைகள், சுற்றுலாத்தலங்களை மறைத்து அதிகளவில் மேகமூட்டம் காணப்படுகிறது. இதனால் கொடைக்கானல் வந்த சுற்றுலாபயணிகள் இயற்கை எழிலை கண்டுரசிக்கமுடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை ஆகிய பகுதிகள் முற்றிலும் தெரியாமல் மேகக்கூட்டங்கள் மறைத்திருந்தது.
பிரையண்ட் பூங்கா, ஏரியை கூட சில நேரங்கள் காணமுடியாமல் மறைத்து மேகக்கூட்டங்கள் நிரம்பியிருந்தன.
சாலைகளில் எதிரேவரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் மெதுவாக சென்றன. நேற்று பகலில் கொடைக்கானலில் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதம் 82 சதவீதம் இருந்ததால் குளிர் உணரப்பட்டது. இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை சென்றதால் கடும் குளிர் நிலவியது.
வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாபயணிகள் பலரும் குளிரை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இல்லாததால் ஒரு நாள் சுற்றுலாவாக முடித்துக்கொண்டு பலரும் கொடைக்கானலில் இருந்து மாலையே புறப்பட்டனர். இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறைந்து கடும்குளிர் நிலவ வாய்ப்புள்ளது என வானிலை நிலவரம் தெரிவிக்கிறது.