

ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் 'தலைவி' திரைப்படம் மற்றும் கெளதம் மேனன் இயக்கும் வெப் சீரீஸுக்கு எதிராக உரிமையியல் வழக்குத் தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தவர் ஜெயலலிதா. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் தன்னை அடுத்த தலைவராக நிலைநிறுத்தி 1990-ல் அதிமுக தலைமைப் பொறுப்பேற்ற ஜெயலலிதா 1991-ல் அதிமுக ஆட்சி அமைத்து முதல்வரானார். கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடத்திய ஜெயலலிதா, எம்ஜிஆரை விட அதிக வெற்றிகளை அதிமுக பெறக் காரணமாக இருந்தார்.
2016-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சி அமைத்து முதல்வரான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5-ம் தேதி அன்று மறைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக, இரண்டு மூன்றாகப் பிளவாகி தற்போது ஒன்று சேர்ந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தன் பங்குக்கு ஒரு கட்சி தொடங்கி பின்னர் அதைக் கலைத்துவிட்டார்.
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாகவும், வெப் சீரிஸாகவும் தயாரிப்பதாகப் பலரும் அறிவித்தனர். இதில் 'தலைவி' என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.
அதில் ஜெயலலிதா 1991-க்குப் பிறகு அணியும் ஆடையுடன் அவர் காட்சி அளிக்கும் படம் இருந்தது. இதே போல் கெளதவ் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாகத் தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் 'தலைவி' படத்தையும், வெப் சீரிஸையும் தயாரிக்கத் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்கத் தடை விதிக்க, உரிமையியல் வழக்குத் தொடர தீபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.