

கிராம மக்கள் அனைவருக்கும் காய்கறிகளும், பழங்களும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் அடுத்த ஓராண்டில் கூடுதலாக 10 ஹெக்டேரில் காய்கறியும், 2 ஹெக்டேரில் பழங்களும் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறைக்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ சரிவிகிதத்தில் சத்தாண உணவு சாப்பிட வேண்டும். அதற்கு அன்றாடம் 300 கிராம் காய்கறிகள், 100 கிராம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை மிக அதிகமாகவும், காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி மிகக் குறைவாகவும் உள்ளது. அதனால், பற்றாக்குறையால் சந்தைகளில் அதன் விலையேற்றம் ஏற்பட்டு ஏழை, எளிய மக்களால் காய்கறிகள், பழங்களை வாங்கி சாப்பிட முடியாமல் குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளில் குறைமாத பிரசவம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உதாரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் ஆண்டுதோறும் 6 ஆயிரம் பிரசவம் நடந்தால் அதில் 2 ஆயிரம் பிரசவங்கள் குறைப் பிரசவமாக நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை ஆய்வுப்படியும் நோய்கள் அதிகரிப்பிற்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரதானமாக உள்ளது.
அதனால், தமிழக அரசு வரும் ஆண்டிற்குள் தோட்டக்கலைத்துறை மூலம், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் அடுத்த ஓராண்டில் கூடுதலாக 10 ஹெக்டேரில் காய்கறியும், 2 ஹெக்டேரில் பழங்களும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், ‘‘தமிழகத்தில் தற்போது காய்கறிகள் 2 லட்சத்து 20 ஹேக்டேரிலும், பழங்கள் 2,84,000 ஹேக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. அனைத்து மக்களுக்கு காய்றிகள், பழங்கள் கிடைக்க தோட்டக்கலைத்துறை பயிர்கள் சாகுபடி பரப்பு புள்ளிவிவரப்படி தற்போது இருக்கக்கூடிய பரப்பு போதுமானது இல்லை என்பது தெரிய வந்தள்ளது.
அதனால், சாகுபடி பரப்பை அதிகரிக்க இந்த சிறப்பு அபிவிருத்தி திட்டம் தொடங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் இருக்கிற காய்கறி, பழங்கள் சாகுபடி பரப்பை கூடுதலாக 12 ஹெக்டேர் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழக பழங்கள் சாகுபடி பரப்பை 3,20,000 ஹெக்டேராகவும், காய்கறிகள் பரப்பை 3,95,000 ஹெக்டேராகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 2,690 ஹெக்டேரில் காய்றிகள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், 667 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த புதிய திட்டத்தில் மாவட்டத்திற்கு கூடுதலாக 6,670 ஹெக்டேர் காய்கறி சாகுபடி பரப்பு தேவைப்படுகிறது. இதேபோல் பழங்களைப் பொறுத்தவரையில் மதுரையில் 11,422 ஹெக்டேர் பரப்பு உள்ளது.
வருவாய் கிராமங்கள் அடிப்படையில் கூடுதலாக 1,392 ஹெக்டேர் தேவைப்படுகிறது. இந்த திட்டத்தால் கிராம மக்களுக்கு எளிதாகவும், விலை குறைவாகவும் காய்றிகள் பழங்கள் கிடைக்கவும், கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் வருவாயை ஈட்டவும் உதவியாக இருக்கும்.
அதற்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்தில் ஆட்சியர் வழிகாட்டுதலுடன் விவசாயிகளை கூடுதல் பழங்கள், காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை திட்டங்கள் மூலமாகவே இந்த சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்பதில்லை. விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகள் வழங்க சிறப்பு திட்டங்கள் மூலமும் நிதியுதவி பெற தமிழக அரசு அனுமதித்துள்ளது, ’’ என்றார்.