

நடிகை காயத்ரி ரகுராம் தனக்கு மிரட்டல் வருவதாகத் தெரிவித்து தனக்கு பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.
நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பிரபலமாக அறியப்படுபவர். பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள். பாஜகவின் ஆதரவாளராக இருக்கிறார். சமீபத்தில் அயோத்தி தீர்ப்பு வெளியானது குறித்து தனது கட்சிக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கோயில் சிலைகள் குறித்துப் பேசிய காணொலி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து திருமாவளவனைக் கண்டித்திருந்தார். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இது அவரது ட்விட்டர் பக்கத்தில் மோதலாக வெடித்தது. காயத்ரி ரகுராம் வீட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தன்னை எதிர்ப்பவர்கள் தான் குறிப்பிட்ட தேதியில் சென்னை கடற்கரைக்கு வருவதாகவும் அங்கு வந்து தைரியமிருந்தால் தன்னைச் சந்திக்கலாம் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார். இடையில் தான் திருமாவளவனை பெரிதும் மதிப்பதாகவும் கோயில் விவகாரத்தில் அவர் பேசியதை மட்டும் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் பெரிதாகச் சென்ற நிலையில் இன்று திடீரென காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகை காயத்ரி ரகுராம் காவல் ஆணையரைச் சந்திக்க அனுமதி கேட்டார். காவல் ஆணையர் வேறு பணியில் இருந்ததால், பின்னர் அங்குள்ள உயர் அதிகாரியிடம் தனது கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.
அதில் யார் பெயரையும் குறிப்பிடாமல் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், தனக்கு அனாமதேய போன் கால்கள் அதிகம் வருவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையர் அலுவலகத்தின் உயர் அதிகாரியிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து பின்வாசல் வழியாக காயத்ரி ரகுராம் வெளியேறிச் சென்றார். காயத்ரி ரகுராம் அளித்த கோரிக்கை மனு, உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.