

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. புறநகர் மாவட்டச் செயலாளர் த.இந்திரஜித் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி முன்னிலை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பங்கேற்று உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து இந்த தேர்தலிலும் போட்டியிடுவோம். எந்தெந்த இடங் களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைமையுடன் மாநில நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் மாவட்ட அளவிலான குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்தும்.
இலங்கையில் வாழும் தமிழர் கள் சுதந்திரமாக வாழ வழியில்லாத நிலை, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை குறித்து இந்தியாவுக்கு வரவுள்ள இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி தெளிவா கப் பேசி முடிவெடுக்க வேண்டும்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அதி முக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை வரவேற் கிறோம் என்றார்.