Published : 25 Nov 2019 09:56 PM
Last Updated : 25 Nov 2019 09:56 PM

தமிழ்நாட்டில் போதைப்பொருள் உபயோகிப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: தென் பிராந்திய அதிகாரிகள் கூட்டத்தில் டிஜிபி  திரிபாதி பேச்சு

போதைப்பொருள் கடத்தலை ஒருங்கிணைந்து கண்டறிந்து பிடிப்பது எனவும், நவீன வகை போதை பொருள் கடத்தலை தடுப்பது குறித்தும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவிற்கான தென்னிந்திய பிராந்தியங்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இன்று (25.11.2019)போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவிற்கான தென்னிந்திய பிராந்தியங்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை மாநகர காவல் அதிகாரிகள் மெஸ் அமைவிடத்தில் நடந்தது.

இதில் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி, கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் வழிகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொண்டு, இளம் தலைமுறையினரை இச்சமுதாய சீர்கேட்டிலிருந்து காப்பாற்றவேண்டியதன் பொறுப்பினை உணர்ந்து பணியாற்ற கோரிக்கை வைத்தார்.

கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயர்ந்தவண்ணம் உள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் குற்றப்பிரிவு (போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு) காவல்துறை கூடுதல் டிஜிபி முகமது ஷகில் அக்தர், அனைத்து மாநில போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு போதைப் பொருளற்ற தென்னிந்தியாவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க அறிவுறுத்தினார்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கேரள மாநில ஆயத்தீர்வை ஆணையர் / காவல்துறை கூடுதல் டிஜிபி அனந்த கிருஷ்ணன், மற்றும் ஐஜி (நிர்வாகம்)பி. விஜயன், கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி தயானந்தா, தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய போதைப் பொருள் தடுப்பு முகமை துணை இயக்குநர் முத்தா அசோக் ஜெயின், அந்தமான் நிகோபார் தீவுகள் காவல்துறை ஐஜி சஞ்சை குமார், தெலுங்கானா மாநில குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி பரிமளா ஹனா நுத்தன், புதுச்சேரி மாநில தெற்கு காவல்துறை எஸ்.பி சிந்தா கோதண்டராம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற மாநிலங்களுக்கிடையே போதைப் பொருள் தடுப்பு முகமையுடன் இணைந்து தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் நவீன முறையிலும், இணையதள உதவியுடனும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது பற்றியும், கூரியர் சேவை மூலமாகவும், வான்வழி போக்குவரத்திலும் சமீபகாலத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது பற்றியும், அதனை தடுக்கும் வழிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி போதைப் பொருள் கடத்தலில் வெளிநாட்டினர் ஈடுபடுவது பற்றியும் அதனை தடுக்க விசா வழங்குதளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை எஸ்.பி கலைச்செல்வன், பங்கேற்று விரிவுரை அளித்ததுடன், தமிழ்நாடு நில அபகரிப்பு சிறப்பு பிரிவு காவல்துறை எஸ்.பி. ப. கண்ணம்மாள், தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x