

உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்த அதிமுக முயற்சி செய்து வருவதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த அமமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, "துரோகம் என்ற வார்த்தைக்கு வரும் காலத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகத்தைப் பற்றி பேசுகிறார். அவர் பொய்யை உண்மை போல பேசுவார். அவர் செய்யும் தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவார்.
உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்த அதிமுக முயற்சி செய்து வருகிறது. இவர்களே ஆட்களைத் தயார்படுத்தி நீதிமன்றம் அனுப்பி உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஏற்பாடு செய்கின்றனர்.
அமமுக இந்த தேர்தல் மட்டும் அல்ல எந்தத் தேர்தலிலும் போட்டியிடுபவர்கள் யாரிடமும் பணம் வசூல் செய்யப் போவது கிடையாது.
ஜனநாயக படுகொலை..
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எப்படி ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓர் ஆட்சி இங்கு அமைந்ததோ அதே போல மஹாராஷ்டிராவில் இன்றைக்கு ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.
ஆனால் இதற்கு திமுக கண்டனம் தெரிவிப்பதையும் ஏற்க இயலாது. திமுக தங்களுக்கு சாதகமாக நடந்தால் வாயை மூடிக்கொண்டு இருக்கும். திமுக இரட்டை வேடம் போடவும், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் தயாரான கட்சி.
தர்மம் மீண்டும் வெல்லும்..
"அண்ணன் தினகரனுக்கு ஓட்டு போடங்க. அவர் தான், அம்மா 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கட்சி இருக்கும் என்று சொன்னதற்கு எடுத்துக்காட்டாக வந்திருக்கிறார்" என்று சொல்லி எனக்காக ஆர்கேநகரில் பிரசாரம் செய்தவர்கள், இப்போது பதவி இருக்கிறது என்ற மமதையில் எதை வேண்டுமானாலும் பேசுகின்றனர். காலம் இதற்கு பதில் சொல்லும். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும்" என்றார்.