Published : 25 Nov 2019 08:19 PM
Last Updated : 25 Nov 2019 08:19 PM

மீண்டும் உயரும் சின்ன வெங்காயம் விலை: கொள்முதலில் கிலோ 130-க்கும், சில்லறைக்கு ரூ.150-க்கும் விற்பனை

தென்தமிழகத்தின் முக்கிய மொத்த கொள்முதல் சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130-க்கும், சில்லறை கடைகளில் ரூ.150-க்கும் விற்பதால் பொதுமக்கள் அன்றாடம் சமையலில் சின்ன வெங்காயத்தை சேர்க்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சின்ன வெங்காயத்திற்கு திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் பெரிய சந்தைகள் செயல்படுகின்றன. அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து உற்பத்தியாகும் சின்ன வெங்காம், இந்த சந்தைகளுக்கே வருகின்றன.

இங்கிருந்துதான் வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு செல்கின்றன. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழை, கடினமாக பெய்ததால் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அழிந்துவிட்டன.

அதன் காரணமாக, கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயம் விலை சந்தைகளில் உயர்ந்து விட்டது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையான சின்ன வெங்காயம், இன்று முதல் மீண்டும் விலை உயரத்தொடங்கியது.

மொத்த கொள்முதல் சந்தைகளில் மதுரையில் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரையும், திண்டுக்கல்லில் ரூ.130, ஒட்டன்சத்திரத்தில் ரூ.130 வரையும் சின்ன வெங்காயம் விற்பனையானது. சில்லறை வியாபாரிகள், இங்கு வாங்கி கிலோ ரூ.150க்கு விற்கின்றனர்.

மதுரை சின்னவெங்காயம் மொத்த வியாபாரி முருகன் கூறுகையில், ‘‘முன்பு பெரிய வெங்காயம் கூடுதலாக விற்றது. தற்போது அது விலை ரூ.70, ரூ.80க்கு குறைந்துவிட்டது. ஆனால், சின்ன வெங்காயம் விலை உயர்ந்துவிட்டது.

சின்ன வெங்காயத்தில் 4 தரம் உள்ளது. நன்கு காய்ந்த முதல் தரத்தை நாங்கள் ரூ.130 வரையும், இரண்டாம் தரத்தை ரூ.100 முதல் ரூ.120 வரையும், ஈரமுள்ள சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.100 வரையும் விற்கிறோம். மழை பெய்துவிட்டதால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து இந்த விலையேற்றும் ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 நாளில் மழை நிற்க வாய்ப்புள்ளது.

அதன்பிறகு தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் தற்போது சாகுபடி செய்துள்ள சின்ன வெங்காயம் அறுவடைக்கு வர வாய்ப்புள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது, ’’ என்றார்.

திண்டுக்கல் வெங்காய ஏற்றுமதியாளர் கமிஷன் வர்த்தக சங்கத் தலைவர் ஏவி.சவுந்தரராஜன் ‘‘10 கிலோ ரூ.1,360 வரையும், கிலோ ரூ.136க்கும் விற்கிறது. ஒட்டன்சத்திரம் சந்தையிலம் இதேநிலைதான். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பெரம்பலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர் மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய சின்ன வெங்காயம் குறைந்துவிட்டது. மழை நின்றால் விலை குறைய வாய்ப்புள்ளது. விலையேற்றம் ஏற்பட்டு ஒன்றரை மாதம் ஆகிவிட்டது.

வெளிநாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து ஒரு மாதமாகிவிட்டது. தமிழகத்தில் உற்பத்தியாகும் சின்ன வெங்காயம் தற்போது உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமே விற்பனைக்கு செல்கிறது. மும்பையில் அதிகளவு பெரிய வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் தற்போது அங்கு 10 டன் மட்டுமே சின்ன வெங்காயம் செல்கிறது.

முன்பு தமிழகத்தில் இருந்து கொச்சி, கொல்லம், கோட்டையம், திருச்சூர், திருவனந்தபுரத்திற்கு டன் கணக்கில் விற்பனைக்கு சென்றது. தற்போது கேரளாவுக்கு பற்றாக்குறையால் சில டன் சின்ன வெங்காயம் மட்டுமே செல்கிறது.

லேசான மழை பெய்து நோய்விழுந்து விளைச்சல் முழுவதும் அழிந்துவிட்டது. மேலும், வெளி மாநிலங்களில் சமையலுக்கு அதிகளவு பெரிய வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் சின்ன வெங்காயம் விலை ஒரளவு கட்டுக்குள்ளே இருக்கிறது. தமிழகத்தில் மிக அதிகமாக சமையலுக்கு சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுவதாலே இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x