

தமிழக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வாருங்கள் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் திருச்சியில் நேற்றிரவு (நவ.24) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கலெக்சன், கரப்ஷன், கமிஷன் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதனைத் தொடங்கி வைத்ததே திமுக தான்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி சுகமாக ஆட்சி அமைப்பார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்வதே திமுகவினால் தான்.
அரசியல் சாக்கடை ஆகிவிட்டது. தமிழக மக்களுக்குப் பழகிவிட்டது. இப்போது பிடித்தும் விட்டது. என் மூச்சு முடிவதற்குள் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்.
குருமூர்த்தி துக்ளக் இதழுக்கு ஆசிரியராக இருக்கிறார். நீங்கள் தமிழகத்துக்கு செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறீர்கள். செய்யக்கூடிய இடத்தில் இருந்து கொண்டு செய்யாமல் இருக்கிறீர்கள். அதனை விட குற்றம் கிடையாது.
தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எந்த ஊழலும் செய்யவில்லை என்று கோயிலில் சத்தியம் செய்ய முடியுமா? ஆனால் அவர்கள் சத்தியம் செய்வார்கள். இவர்களின் குடுமியும் டெல்லியில் இருக்கிறது. இவர்களின் அத்தனை விவரங்களும் டெல்லியில் உள்ளது. இவர்களின் குடுமி உங்கள் கையில் இருக்கிறது. இவர்களை வீழ்த்த முடியும்.
ஆனால் நீங்கள் செய்யவில்லை. இவர்கள் நமக்குக் காவடி தூக்கினால் போதும் எனக் கருதுகிறீர்கள். குடுமி கையில் இருக்கிறது, ஆடும் வரை இவர்கள் இருக்கட்டும் என்று நினைக்கிறீர்களே? உங்களை விட மோசமானவர்கள் இல்லை.
பாஜக வளர வேண்டும் என்றால் தன்னுடைய தார்மீக சக்தியைக் கொண்டு வளர வேண்டும். மற்றவர் முதுகில் ஏறி நின்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் உங்களுக்கு எதற்கு தனிக்கட்சி.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒருபுறம் சாதி விளையாடியது. மறுபுறம் மதம் விளையாடியது. இன்னொரு புறம் பணம் விளையாடியது.
2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்கள். இவர்களை ஒன்றை ஆண்டுகாலம் ஆள விட்டு விட்டால் 4 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு சக்தி வந்து விடும். இவர்களை எதிர்க்கும் ஸ்டாலின் 2 ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். 2 பேரும் பணம் கொடுக்கும்போது, பணம் இல்லாமல் தார்மீகத்துடன் நிற்பவன் எப்படி ஐயா வெற்றி பெற முடியும்?
நான் உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். முடிந்தால் செய்யுங்கள். இந்த ஆட்சியை முதலில் கலைத்து விடுங்கள். கலைப்பது ஒன்றும் சிரமம் கிடையாது. போதி மரத்து புத்தர்களா இவர்கள்? 10 அமைச்சர்கள் மீது ஒரு ரெய்டு உடனடியாக நடக்கட்டும். ரெய்டை நடத்திப் பாருங்கள்.
பஞ்சாயத்து தேர்தலில் கூட உங்களுக்கு இடம் ஒதுக்க அவர்கள் தயாரில்லையே. நீங்கள் தாங்கி தாங்கிப் பிடிக்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதியைப் பிச்சையாகப் போட்டார்கள். அதையும் பெற்றுக் கொண்டீர்கள். 10 அமைச்சர்கள் இடங்களில் ரெய்டு விடுங்கள். கோடி கோடியாகப் பணம் கிடைக்கும்.
அப்படி செய்தால் இந்த ஆட்சியைக் கலைப்பதில் சிரமம் இல்லை. பிறகு ஆளுநர் ஆட்சி நடக்கும். ஒரு ஆறு மாத காலம் ஆளுநர் ஆட்சி நடக்கட்டும். ஆளுநர் ஆட்சி என்றால் உங்கள் ஆட்சி தானே. மீண்டும் 6 மாத காலம் நீடிக்க வேண்டும் என்றால் தான் நீங்கள் நாடாளுமன்றம் போக வேண்டும்.
எவ்வளேவோ நல்ல காரியங்களை 6 மாதங்களில் செய்ய முடியும். அந்த நல்ல காரியங்களைச் செய்யுங்கள். மோடி ஒருநாள் வேட்டி சட்டையில் வந்தவுடனேயே அவர் மீதான எதிர்ப்பு தமிழகத்தில் குறைந்து விட்டதே.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மோடி கூறுவதைக் கேட்டு அவர் மீதான கோபம் தணிந்து விட்டதே. எங்கு சென்றாலும் கணியன் பூங்குன்றனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறாரே. போகிற இடங்கெல்லாம் இந்த மனிதர் வள்ளுவரின் குரலைச் சொல்கிறாரே என்கிறார்கள்.
சீனத்து அதிபரை வைத்துக் கொண்டு இதுவரை எந்த பிரதமர் வேட்டி சட்டையுடன் அமர்ந்து இருந்தார் என எண்ணுகிறார்களே. இவரல்லவா தமிழர்களுக்காக இருப்பவர்கள் எனச் சொல்கிறார்களே. சொல்லிக்கொள்ளுங்கள்.
எனவே துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒன்று செய்ய வேண்டும். மறந்தும் இந்த ஆட்சி நீடிக்க விடாமல் செய்ய வேண்டும். தமிழர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய மாபெரும் கடமை இது. இந்தக் கடமையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பீர்கள்.
6 மாத கால ஆளுநர் ஆட்சியில் நல்லதைச் செய்யுங்கள். தமிழகத்தில் நிலம், நீர் என பஞ்சபூதங்களை மாசுபடுத்துபவர்களை அழித்து ஒழியுங்கள். தமிழகத்துக்கு நல்லது செய்யுங்கள்.
அப்படி நீங்கள் இவர்களை ஆட்சியை விட்டு இறக்கினால், ஆட்சியை விட்டு இறங்கியட உடனேயே பணத்தை மூட்டை கட்டிவிடுவார்கள். அடுத்த தேர்தலில் செலவு செய்ய மாட்டார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் காசு கொடுப்பதை நிறுத்த முடிவு செய்த தகவல் வெளியானால், அறிவாலயத்தில் இருப்பவர்களும் பணத்தை மூட்டை கட்டி விடுவார்கள்.
அதிமுக வாக்காளர்களுக்கு காசை வாரிக் கொடுக்காவிட்டால் திமுகவும் காசு கொடுக்காது. இருவரும் காசு தராவிட்டால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட வேறு ஒரு கட்சி நிச்சயம் தமிழக்தில் ஆட்சிக்கு வரும்’’.
இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.