தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணை பாதுகாப்பு மசோதா ஒத்திவைப்பு: ஜி.கே.வாசன் பாராட்டு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணை பாதுகாப்பு மசோதா ஒத்திவைப்பு: ஜி.கே.வாசன் பாராட்டு
Updated on
1 min read

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைத்திருப்பது பாராட்டுக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழக அரசுக்கு உரிய அணைகளைப் பாதுகாப்பதில், பராமரிப்பதில், இயக்கப்படுவதில் உள்ள பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

அணை பாதுகாப்பு மசோதாவை நடைபெறுகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவர முயற்சித்த வேளையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மசோதாவை ஒத்திவைத்திருப்பது பாராட்டுக்குரியது.

அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக தமிழக அமைச்சர்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து வைத்த கோரிக்கைக்கு ஏற்ப மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு எடுத்த முடிவானது வரவேற்கத்தக்கது.

அணைகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அணைகளை அந்தந்த மாநில அரசு முறையாகப் பராமரித்து, பாதுகாத்து வர வேண்டும் என்ற நிலையில் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

குறிப்பாக அணை பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் மாநில உரிமைகள் பறிபோய்விடக்கூடாது. அணையைப் பாதுகாப்பதில் மாநில அரசுக்கு உள்ள பொறுப்பும், கட்டுப்பாடும் அணை பாதுகாப்பு மசோதாவால் சிதைந்துவிடக்கூடாது.

அதாவது மாநில அரசால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வரும் அணைகள் அதுவும் அண்டை மாநிலங்களில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான அணைகளைப் பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் இந்தப் புதிய மசோதாவால் பிரச்சினைகள் எழ வாய்ப்புண்டு.

இச்சூழலில்தான் தமிழக அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் இன்று அந்த மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழக அரசுக்கு உரிய அணைகளைப் பாதுகாப்பதில், பராமரிப்பதில், இயக்கப்படுவதில் உள்ள பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in