முதல்வர், அமைச்சர்கள் வசிக்கும் பசுமை வழிச் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் 

முதல்வர், அமைச்சர்கள் வசிக்கும் பசுமை வழிச் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் 
Updated on
1 min read

முதல்வர், அமைச்சர்கள் வசிக்கும் சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடையாறு பசுமை வழிச்சாலை பகுதி விஐபிக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருக்கும் பகுதி. இங்கு இன்று காலை 10.30 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் மறியலால் போக்குவரத்து தடைபட்டது. முதல்வர் பழனிசாமி சற்று முன்னர்தான் அவ்வழியாக ராமசாமி படையாச்சி மணிமண்டபம் திறப்பு விழாவுக்குச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் மறியல் நடந்தது. மறியலில் அமைச்சர் சரோஜாவின் வாகனம் சிக்கியது. பின்னர் சிலர் வழி ஏற்படுத்திக் கொடுத்ததை அடுத்து அவர் சென்றார்.

பசுமை வழிச்சாலையில் கே.வி.பி.கார்டன் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் சாலைக்கு வருவதற்கு பொதுவான வழியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வழி அதே பகுதியில் உள்ள வெள்ளிஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடமாகும்.

அந்த இடத்தில் கட்டிடம் கட்ட கோயில் நிர்வாகிகள் முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் அப்பகுதியை கே.வி.பி.கார்டன் பகுதி பொதுமக்கள் பொதுவழியாகப் பயன்படுத்துகின்றனர். தற்போது கோயில் நிர்வாகத்தினர் கட்டிடம் கட்டுவதால் அப்பகுதியின் வழி சுத்தமாக அடைக்கப்பட்டு 2 அடி சாலை வழி விடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள், கட்டிடம் கட்டுங்கள் ஆனால் பொதுவழிக்கு சற்று கூடுதல் இடம் விட்டு கட்டுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். அதை கோயில் நிர்வாகத்தினர் ஏற்காமல் கட்டிடம் கட்டும் பணியில் இறங்கியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையிலான போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாரிடம் பேசிய பொதுமக்கள், பல ஆண்டுகாலமாக இப்பகுதியில் பொதுவழியாக இப்பகுதியைப் பயன்படுத்தி வருகிறோம். தற்போது கட்டிடம் கட்டுகிறேன் என முழுவதும் மூடி சுவர் எழுப்பி, இரண்டு அடி மட்டும் வழி விடுவதால் அவசரத்திற்கு வெளியே செல்ல முடியாது. ஒரு இறப்பு, விபத்து எதுவும் நேர்ந்தால் எப்படி வெளியே செல்ல முடியும் என கேள்வி எழுப்பினர்.

பொதுமக்களுக்கு உரிய தீர்வு காணுவதாகத் தெரிவித்த போலீஸார், தற்போது இருதரப்பினரையும் அபிராமபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in