பாரத் பெட்ரோலிய ஊழியர்கள் போராட்டத்துக்குத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

பாரத் பெட்ரோலியம் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த போராட்டத்திற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கண்டித்து வரும் 28-ம் தேதி காலை 6 மணி முதல் 29-ம் தேதி காலை 6 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.

இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், போராட்டம் நடைபெறவுள்ள நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் அந்நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் ஷெனாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், தொழில் தகராறு சட்டத்தின்படி, பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட 6 வார காலத்திற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் இந்தப் போராட்டம் சட்டவிரோதமாக நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை இன்று (நவ.25) விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், பாரத் பெட்ரோலிய ஊழியர்கள் போராட்டத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in