Last Updated : 25 Nov, 2019 01:43 PM

 

Published : 25 Nov 2019 01:43 PM
Last Updated : 25 Nov 2019 01:43 PM

அரியலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கும் காவல்துறையினர்: குவியும் பாராட்டுகள்

மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கிய அரியலூர் மாவட்ட காவல்துறையினர்.

அரியலூர்

இரவு நேரங்களில் நீண்ட தூரம் வாகனம் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு அரியலூர் மாவட்டக் காவல்துறை சார்பில் தேநீர் வழங்கப்படுவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் என ஒன்பது சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. சிமெண்ட் உற்பத்தி செய்ய முக்கிய மூலப்பொருளான சுண்ணாம்புக்கல் அரியலூர் மாவட்டத்தில் அதிகம் கிடைப்பதே இதற்கு காரணம்.

இந்நிலையில், இந்த சிமெண்ட் ஆலைகளுக்கு தேவைப்படும் சுண்ணாம்புக்கற்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட சுரங்கங்களிலிருந்து நாள்தோறும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த சுண்ணாம்புக் கற்களை சிமெண்ட் ஆலைகளுக்குக் கொண்டு செல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள், கனரக வாகனங்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இது மட்டுமன்றி சிமெண்ட் தயாரிக்க தேவைப்படும் நிலக்கரி பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு லாரிகள் மூலம் சிமெண்ட் ஆலைகளுக்குக் கொண்டு வரப்படுகின்றன.

மேலும், சிமெண்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் அனைத்தும் லாரிகள் மூலமே அதிக அளவு சந்தைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளுக்கென்றே நாள்தோறும் சுமார் மூவாயிரம் லாரிகள் மாவட்டம் முழுவதும் இயங்கி வருகின்றன.

இதுதவிர பேருந்துகள், மற்ற பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார், வேன் என நாள்தோறும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அரியலூர் மாவட்டத்தில் பயணிக்கின்றன.

இதனால், அரியலூர் மாவட்டத்தில் நாள்தோறும் விபத்துகள், உயிரிழப்புகள், கை, கால் சேதம் என பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதனால் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு என அரியலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு கெடுவது உள்ளிட்ட பிரச்சினைகளும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.ஸ்ரீனிவாசன், சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நாள்தோறும் சுமார் 1 மணிநேரமாவது விபத்தைத் தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஒவ்வொரு காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

அதன்படி அனைத்து காவல் நிலையங்களிலும் தலைக்கவசம் அணிவது, வாகனங்கள் ஓட்டும் போது செல்போன் பேச்சுகளைத் தவிர்ப்பது, சாலை விதிகளைக் கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.

திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், நகைக்கடைகள், வீடுகள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கும் உத்தரவிட்டார். அதேபோல், மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் முக்கிய சாலை சந்திப்புகளிலும் விபத்து மற்றும் திருட்டை தடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

இதில், நீண்ட தூரம் வாகனம் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு இரவு நேரங்களில் தேநீர் வழங்க மாவட்ட எஸ்பி ஆர்.ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டு, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதை மக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் பாராட்டுகின்றனர். நீண்ட தூரம் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் கண் அயர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையிலும் தேநீர் வழங்கப்படுவதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சென்னை-தஞ்சாவூர் சாலையில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி, தா.பழூர் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து இரவு நேரங்களில் தேநீரை வழங்கி வருகின்றனர். இதனால், சிறிது நேரம் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நின்று செல்லும் போது விபத்துகள் தவிர்க்கப்படும் என்பதும் காவல்துறையின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x