Published : 25 Nov 2019 11:11 AM
Last Updated : 25 Nov 2019 11:11 AM

மகாராஷ்டிர அரசியல்: வாக்களித்த மக்களுக்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

மகாராஷ்டிராவில் வாக்களித்த மக்களுக்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (நவ.25) வெளியிட்ட அறிக்கையில், "மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து போட்டியிட்ட கட்சிகளுக்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆன பிறகும் ஆட்சியமைக்க முயற்சிகள் தான் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் ஆளுநர் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

மேலும் சிவசேனா கட்சி கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கவில்லை. அதேபோல காங்கிரஸ், பதவிக்காக கொள்கையைக் கடைபிடிக்கத் தவறியது. இப்படி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பதவி மோகத்தை தெரிந்து கொண்ட வாக்களித்த மக்கள் ஏமாற்றத்தோடு நம்பிக்கை இழந்து இருந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ் உட்கட்சி பூசல் உள்ளிட்ட பல காரணங்களால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த சூழலில் அந்த மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடி தேவை ஒத்த கருத்துடைய ஆட்சி என்ற ரீதியில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் உடன் பல சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்து அட்சி அமைக்கக்கூடிய ஒரு அவசர முடிவை எடுத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டதால் மாநில மக்கள் நலன் கருதி ஆளுநரும் அம்மாநிலத்திற்கு மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸுக்கும், துணை முதல்வராக அஜித் பவாருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதால் தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவோடு சேர்ந்து கொண்டு ஆளுநர் எடுத்த நிலைப்பாட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறது.

இருப்பினும் மகாராஷ்டிராவில் நிலவும் விவசாயம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு உடனடி தேவை உடனடி அரசு. அதற்குண்டான ஒத்த கருத்துடைய முயற்சிக்கு எடுக்கப்பட்ட நிலையிலே இனிவரும் நாட்களில் அது சரியா, தவறா என்ற முடிவு எடுக்கக்கூடிய சூழலில் பெரும்பான்மைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற அதிகாரத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா மக்கள் ஆட்சி அமையவில்லையே என காத்திருந்த கட்டாய சூழலில் பதவிக்காக கூட்டணி தர்மத்தை, கொள்கையை விட்டுக்கொடுக்க தயாரான கட்சிகள் ஒருபுறம் என்றால் மறுபுறம் ஆட்சி அமைத்திருக்கின்ற கட்சிக்கு இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வாக்களித்த மக்களுக்கு விரைவில் நல்ல முடிவு கிடைத்து ஆட்சி தொடர்ந்து மக்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதுதான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x