

துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் திருச்சியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசும்போது, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட இக்கட்டான அந்த சமயத்தில் தமிழகத்துக்குத் திசை காட்டியது துக்ளக். சசிகலாவை முதல்வராக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சந்தித்து புலம்பினார். அவரை ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்தேன். அதற்குப் பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. இரண்டாகப் பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்ததில் எனக்குப் பங்குண்டு" என்று குருமூர்த்தி பேசினார்.
இந்நிலையில், குருமூர்த்தியின் இந்தப் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.25) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "இது ஆணவத்தின் உச்சம். திமிர்வாதத்தின் உச்சம். இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது. பொதுவாகவே அனைவருக்கும் நாவடக்கம் தேவை. அவர் ஏற்கெனவே அதிமுக குறித்துப் பேசி, எங்களிடம் இருந்து விமர்சனங்களைப் பெற்றவர்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.