

திருப்பூரில் காணாமல் போன பள்ளி சிறுமியை புகார் அளித்த 2 மணி நேரத்துக்குள் விருத்தாசலத்தில் தனிப்படை போலீஸார் மீட்டனர்.
திருப்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவி ஒருவர், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுடையவர். சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்காக சமீபத்தில் நடைபெற்ற தகுதி போட்டியில் தேர்வாக முடியவில்லை என்ற கவலையில் இருந்த இவர், கடந்த 21-ம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வராமல் மாயமானார். பல இடங்களில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் வடக்கு காவல் நிலையத்தில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் புகார் அளித்தனர்.
மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், துணை ஆணையர் வெ.பத்ரி நாராயணன் மேற்பார்வையில் உதவி ஆணையர் வெற்றிவேந்தன், ஆய்வாளர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், மாணவி மங்களூரில் இருந்து திருச்சி வழியாக சென்னை எழும்பூர் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரிந்தது. திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாக அது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மாணவி குறித்த தகவல் ரயில்வே காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. துரித தகவலின் பேரில் காணாமல் போன மாணவி, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 11 மணியளவில் மீட்கப்பட்டார். புகார் அளித்த 2 மணி நேரத்தில் மாணவியை மீட்ட தனிப்படையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.
மாணவியின் பெற்றோர் துணை ஆணையரை நேற்று முன்தினம் மாலை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது பிரச்சினைகளை எதிர் கொள்ளும்போது தைரியமாகவும், மனோபலத்துடனும் இருக்க வேண்டும் என சிறுமிக்கு துணை ஆணையர் அறிவுரை கூறினார்.