

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எல்லைத் தகராறுகள் குறித்து எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, எல்லைத் தகராறுகள் குறித்த கேள்விகளை பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் எழுப்பியிருந்தார்.
அது தொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விகள்:
பொதுமக்கள் அறிந்து கொள்கின்ற வகையில், எல்லைகளின் வரலாறு குறித்த ஆவணம் வெளியிடும் திட்டம் அரசிடம் இருக்கின்றதா?
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், இந்தியாவுக்கு எல்லைத் தகராறு இருக்கின்றதா? அந்த எல்லைகளை, வரலாற்று ஆய்வாளர்கள் எந்த வகையில் வரையறுத்தார்கள்?
எல்லைகள் குறித்த ஆவணத்தை எழுதும்போது, நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதேனும் மறைக்கப்படுகின்றதா?
எல்லைகள் குறித்த ஆவணம் வெளியிடுவதற்கான கால வரையறை ஏதும் செய்யப்பட்டு இருக்கின்றதா?
இக்கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.
அக்கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் அளித்துள்ள விளக்கம்:
"இந்திய பாதுகாப்புத் துறையின் நிதி உதவியுடன், டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இந்திய எல்லைகள் குறித்த வரலாற்று ஆவணம் ஒன்றை எழுதி வருகின்றது.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், சில இடங்களில் எல்லைத் தகராறு இருக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டுப் பார்வையுடன், அந்த வரலாற்று ஆவணம் எழுதப்படுகிறது.
இந்த ஆவணத்தை, இரண்டு ஆண்டுகளில் எழுதி முடிக்க, நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகின்றது".
இவ்வாறு ஸ்ரீபத் நாயக் விளக்கம் தெரிவித்துள்ளார்.