

பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் நேற்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொடிவேரி தடுப்பணையில் குளித்த இருவர் நேற்று மாலை நீரில் மூழ்கினர்.
பவானிசாகர் அணை கடந்த 8-ம் தேதி நிரம்பிய நிலையில், அணையிலிருந்து அதிக அளவு உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, கோபியை அடுத்த கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே மழைப்பொழிவு குறைவு மற்றும் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், கொடிவேரி தடுப்பணையில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக கொடிவேரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால், நேற்று குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே குளிக்க வந்திருந்தனர்.
இந்நிலையில், கொடிவேரி தடுப்பணையில் குளித்த நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சுதீஷ் (15) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (19) ஆகி யோர் நேற்று மாலை நீரில் மூழ்கினர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேர தேடுதலுக்குப்பின்னர், ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த சுதீஷ் மற்றும் விக்னேஷின் உடல் மீட்கப்பட்டது.
சுதீஷ் 10-ம் வகுப்பும், விக்னேஷ் கல்லூரியிலும் படித்து வந்துள்ளனர். குடும்பத்துடன் சுற்றுலா வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பங்களாபுதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.