பாலில் அதிக நச்சுத்தன்மை அரசு அறிக்கை வெளியிட வணிகர் சங்கம் வலியுறுத்தல்
தமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக தகவல் வெளியான விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவட்ட சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் போயம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆன்-லைன் விற்பனையை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய அளவில் மாநிலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் டிசம்பர் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அரசு நிறுவன பாலில் தவறு உள்ளதா அல்லது தனியாரின் பாலில் நச்சு உள்ளதா என்பதை அரசே விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உற்பத்தியாளர்கள் செய்யும் தவறுக்கு வணிகர்கள் துணை போகிறோமா என்ற அச்ச உணர்வு எங்களுக்கு ஏற்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் துறையினர் கடைகளில் சோதனை செய்து பணம் பறிப்பதை தவிர்த்து, விற்கும் பொருளில் தவறு உள்ளது என்றால் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
