

ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத் தில் மாறுதல் ஏற்படும் என துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் திருச்சியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:மகாராஷ்டிராவில் இன்று நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படையாகவே இல்லை. இப்படியொரு நிலையற்ற சூழல் உருவாவதற்கு சரத் பவாரே காரணம். அதற்காக பாஜக செய்தது சரி எனக்கூறவில்லை.
அங்கு, பாஜக தர்மசங்கடத்தில் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிவசேனாவை பாஜகவால் மட்டுமே அடக்கி வழி நடத்த முடியும். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாக கருதி பாஜக இப்படியொரு செயலை செய்திருந்தால் வரவேற்போம். அதற்கு மாறாக எதிர் தரப்பின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தால் ஏற்க மாட்டோம்.
ஓபிஎஸ் என்னை சந்தித்தார்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட இக்கட்டான அந்த சமயத்தில் தமிழகத்துக்கு திசை காட்டியது துக்ளக். சசிகலாவை முதல்வராக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்து புலம்பினார். அவரை ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்தேன். அதற்கு பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. இரண்டாக பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்ததில் எனக்கு பங்குண்டு.
முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி பாவமான ஆட்சி, தவறான ஆட்சி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. பாஜகவிடம் எனக்கு செல்வாக்கு இருப்பதால், அவர்களிடம் சொல்லி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என இங்கு பேசினர்.
விஷப்பரீட்சையில் இறங்க நான் தயாராக இல்லை. அரசியல் சட்டப்படி இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால், அடுத்த 6 மாதத்துக்குள் தமிழகத்தை மாற்றி விட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. தமிழகத்துக்கு மக்கள் மூலமாகத்தான் மாறுதல் வர முடியும். ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாறுதல் ஏற்படும்.
அதிமுகவை டிஸ்மிஸ் செய்தபிறகு நிச்சயம் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியாது. ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறி. அப்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? திமுகவும், அந்த குடும்பமும் தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய மிகப்பெரிய சக்திகள். லஞ்சம், இந்தி எதிர்ப்பு, தேசிய எதிர்ப்பு, பாரம்பரிய எதிர்ப்பு ஆகியவை தமிழ்நாட்டின் காயங்களாக உள்ளன. இதற்கு தீர்வு காண துக்ளக் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மகான்களின் ஆசியே காரணம்
ஆன்மிக சொற்பொழிவாளர் உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் எத்தனையோ இன்னல்கள் இருந்தபோதிலும், விரோத மனப்பான்மை இருந்தபோதிலும் துக்ளக் இதழ் வெற்றியுடன் நடத்தப் பட்டிருப்பதற்கு பல மகான்களின் ஆசியே காரணம். சத்தியம், தர்மத்தில் இருந்து மாறாமல் துக்ளக் இதழ் வெளிவந்து கொண்டுள்ளது. ஆன்மிகம், தனி மனிதன், தேசம் ஆகிய மூன்றையும் பார்க்கும் ஒரே பத்திரிகை துக்ளக் மட்டுமே’’ என்றார்.
விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா நன்றி கூறினார்.