

அதிமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்யப்படக்கூடும் எனவும், அப்படி வந்தால் அவர் அதிமுகவில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகின. அப்படி இணைந்தால் அவருக்கு அதிமுகவில் பதவிக் கொடுக்கப்படுமா எனவும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் சட்ட விதிகளில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, அதிமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடங்கி எந்த ஒரு பதவியை ஏற்கும் ஒருவர் கட்சியில் 5 ஆண்டுகள் அதிமுக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.