

அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சி மிக வலிமையாக நடைபெறுகிறது. நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறன. நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் என்ன தேவையோ அதை அளித்து வருகிறோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு சரிவு ஏற்பட்டது. ஆனால் அது வேலூர் தேர்தலில் சரி செய்யப்பட்டது. இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் என்றும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் காண்பித்துள்ளனர். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை.’’ எனக் கூறினார்.