

கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர் என முதல்வர் பழனிசாமி பேசனார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:
‘‘தமிழக மக்கள் வாக்களிப்பதில் சிறப்பான முடிவெடுப்பவர்கள். நாடாளுமன்ற தேர்தலையும், சட்டப்பேரவைத் இடைத்தேர்தலையும் பிரித்து பார்த்து மக்கள் வாக்களித்தனர்.
கூட்டணியை ஒருங்கிணைப்பதில் இடைவெளி இருந்ததால் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம்.
10 ஆண்டுகளுக்கு மேல் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் மூலம் 5.11 லட்சம் மக்களின் குறைகளை தீர்த்துள்ளோம்.
அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் தான் மற்றவர்களை தூண்டிவிடுகிறார். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை.
கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய் படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.’’ என பேசினார்.