காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சியினரும் பிரதமரை சந்திக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு வைகோ கோரிக்கை

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சியினரும் பிரதமரை சந்திக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு வைகோ கோரிக்கை
Updated on
1 min read

காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுக்க, தமிழக முதல்வர் ஜெய லலிதா அனைத்துக் கட்சியினருடன் சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றார் மதிமுக பொதுச் செயலாளரும், காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான வைகோ.

காவிரி பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சை யில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோ, பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியயதாவது:

கர்நாடக முதல்வர், நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோர், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை யாரா லும் தடுக்க முடியாது என்கின்றனர். மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவும் இதை வலியுறுத்தியுள் ளார்.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, அணையைக் கட்டுவோம் என நாட்டின் சட்ட அமைச்சரே சொல்வது இந்திய இறையான்மைக்கு விடப்பட்ட சவால். எனவே, பிரதமர் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இது மிகவும் ஆபத்தான பிரச்சினை என்பதால், தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, பின்னர் பிரதமரை சந்திக்க வேண்டும். அப்போதுதான், காவிரி பிரச்சினை எவ்வளவு ஆபத்தானது என்பது மற்றவர்களுக்கு புரியவரும். தமிழகத்தின் தரப்பும் பலமாகும்.

அதற்குப் பின்னரும் பிரதமரும், மத்திய அரசும் நியாயமாக நடக்கவில்லை என்றால், மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, உரிய முடிவெடுக்க வேண்டும். அப்போது, தமிழக முதல்வருக்கு பக்கபலமாக நின்று அனைவரும் போராடுவோம்.

தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். தற்போது ‘ஷேல் கேஸ்’ எடுக்கும் திட்டம் வர உள்ளதாகத் தெரிகிறது. இது, மீத்தேனை விட ஆபத்தானது. இதை எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார் வைகோ.

ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரா.திருஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன், காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in