

சென்னை
உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் அதிகளவில் பங்கேற்க தமிழக அரசு உதவும் என்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘பிலிம் பஜார்’ என்ற சினிமா சந்தை மூலம் இந்திய திரைப்பட படைப்பாளிகளை உலக படைப்பாளிகளுடன் இணைக்கும் நிகழ்ச்சியும் இவ்விழாவில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று பேசியதாவது:சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னையை உலக திரைப்பட விழாக்களின் சந்தையாக மாற்றியுள்ளோம். விரைவில் ‘தமிழ்நாடு பிலிம் பெசிலிடேசன்’ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே முன் மாதிரி முயற்சியாக அரசு மூலம் ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சென்னைக்கு அருகில் பையனூரில் பிரமாண்ட திரைப்பட படப்பிடிப்புத் தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதே வளாகத்தில் அனைத்து திரைப்படக் கலைஞர்களும் தங்க ஏதுவாகமிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
திரைப்படத் துறையினருக்கு 100 ஏக்கர் பரப்பில் டிஸ்னிலேண்டுக்கு நிகராக மிகப்பெரிய திரைப்பட தளம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நமது மாணவர்களும் நடைப்பாளிகளும் உலகத்திரைப்பட விழாக்களில் படைப்புகளை கொண்டு சேர்க்க உதவியும் வழிகாட்டுதலும் செய்யப்படும். அடுத்தாண்டு முதல் தமிழ்த் திரைப்படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்க தமிழக அரசு உதவும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சென்னை மண்டல துணை பொது மேலாளர் ராமகிருஷ்ணன், விளாத்திக்குளம் எம்எல்ஏ சின்னப்பன், தென்னிந்திய திரைப்பட சம்மேளன செயலாளர் ரவி கொட்டாரக்கரா, இயக்குநர் ஆர்.பார்த்திபன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஏவிஎம்.சண்முகம் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.