

தொடர்ந்து அழுத குழந்தையின் அழுகையை அடக்க துணியை வைத்ததில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. கொலை செய்த தாயை வாலாஜாபேட்டை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் அம்மு (எ) பவித்ரா (24). இவரும் வாலாஜாபேட்டை வன்னிவேடு பகுதியைச் சேர்ந்த கௌரி சங்கர் (30) என்பவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இருவருக்கும் 8 வயதிலும், ஒன்றரை வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கௌரி சங்கருக்கு பவித்ரா மீதான நாட்டம் குறைந்தது. கடந்த ஆண்டு வேறொரு பெண்ணுடன் பழக, இதை பவித்ரா கண்டித்துள்ளார். இதையடுத்து கௌரி சங்கர் பவித்ராவையும் 2 பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு அந்தப் பெண்ணுடன் சென்றுவிட்டார்.
பவித்ரா, கணவன் இல்லாமல் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையைத் தள்ள வேண்டிய நிலைக்கு ஆளானார். அதில் ஒரு குழந்தை 2 வயதைக்கூட எட்டாத குழந்தை. அதையும் பார்த்துக்கொண்டு வேலைக்கும் சென்று குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய நிலையால் கடுமையான மனவிரக்தியில் இருந்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த பவித்ரா வேலைக்காக தினமும் வாலாஜா பேட்டையிலிருந்து காஞ்சிபுரம் செல்வார். குழந்தையைப் பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டுச் செல்வார். அக்கம் பக்கத்தவர் இரக்கம் காரணமாக உதவியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
வேலை செய்த களைப்பு, பயணக் களைப்பும் சேர்ந்து சோர்வை ஏற்படுத்தியதில், பவித்ரா பக்கத்து வீட்டிற்குச் சென்று குழந்தையை வாங்கி வந்துள்ளார். சமையல் வேலையில் ஈடுபடும்போது குழந்தை திடீரென அழுதுள்ளது. எவ்வளவோ சமாதானம் செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தாததால் ஆத்திரத்தில் குழந்தையின் அழுகையை நிறுத்த புடவைத் தலைப்பால் குழந்தையின் வாயை மூட குழந்தை மூச்சுத்திணறி மயக்க நிலைக்குச் சென்றது.
இதனால் பதற்றமடைந்த அவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்குச் சென்றார். குழந்தை அழுதுகொண்டே இருந்தது, திடீரென மயக்கமாகிவிட்டது என்று கூறி சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். மருத்துவர்கள் சோதனை செய்தபோது குழந்தை ஏற்கெனவே இறந்துபோனது தெரியவந்தது. அவர்கள் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பவித்ரா பதில் சொன்னதால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் வந்து விசாரித்தபோது மூத்த மகள், ''பாப்பா அழுதுகொண்டே இருந்ததால் அம்மா புடவைத் தலைப்பால் மூடினாங்க. அப்புறம் பாப்பா மயக்கமாகிவிட்டாள்'' என்று கூறியுள்ளார். அம்மாவே மகள் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது தெரியவந்ததன் பேரில் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
ஒருபக்கம் மகள் இறந்த துக்கம், மறுபக்கம் கைது நடவடிக்கை, இன்னொரு பக்கம் 8 வயது மகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற நிலையில் பவித்ரா கதறி அழுதுள்ளார். போலீஸார் அவரிடம் இது எப்படி நடந்தாலும் கொலை செய்யும் நோக்கம் உனக்கில்லை என்றாலும் உயிர் போனதால் அதை கொலை வழக்காகத்தான் பதிவு செய்யவேண்டி இருக்கும் எனக்கூறி கைது செய்தனர்.