'தமிழகத்தில் 3400 அரசுப் பள்ளிகளை மூட முயற்சி': ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

'தமிழகத்தில் 3400 அரசுப் பள்ளிகளை மூட முயற்சி': ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மத்திய, மாநில அரசுகளின் மோசமான கல்விக்கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை இழுத்து மூட அரசு தீவிரம் காட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் இன்று (சனிக்கிழமை) பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாவட்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ராமகிருஷ்ணன், "மத்திய, மாநில அரசுகளின் மோசமான கல்விக்கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை இழுத்து மூட அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்களின் இலவச கல்வி கேள்விக்குறியாகும். எனவே அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 42 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது 15 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்கு என தனியாக அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால் அந்த பழங்குடியின மக்கள் வாழும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன.

2008 – 09ம் ஆண்டு கண்கெடுப்புப்படி பழங்குடியின பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 42 ஆயிரம் ஆக இருந்தது தற்போது 17 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேபோல், ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 1 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே இந்த பள்ளிகளை தரம் உயர்த்தி மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் இலவச கல்வி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இது மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கையால் குறைகிறது.

அரசு பள்ளிகள் மூடப்பட்டால் இலவச கல்வி இனி சாத்தியமில்லை. ஏழை எளிய குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே இது போன்ற மாநாடுகளை நாங்கள் நடத்துகிறோம். அரசு இந்த பள்ளிகளை மேம்படுத்திட வேண்டும். இலவச கல்வியை உறுதிப்படுத்திட வேண்டும்" என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in