

பாஜகவின் ஏஜெண்டாக மகாராஷ்டிரா ஆளுநர் செயல்பட்டிருக்கிறார் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவ.23) வெளியிட்ட அறிக்கையில், "மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. பணம், பதவி ஆசைகளைக் காட்டி சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிற குதிரை பேர அரசியல் மூலமாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலையை வேறு எவரும் நிகழ்த்த முடியாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலையை சகித்துக் கொள்ள முடியாத பாஜக, ஆளுநர் தயவோடு குறுக்கு வழயில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பாஜகவின் ஏஜெண்டாக மகாராஷ்டிரா ஆளுநர் செயல்பட்டிருக்கிறார்.
இன்று அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு காலை 8.15 மணிக்கெல்லாம் பாஜக ஆட்சி அமைத்த அதிசயம் நடந்திருக்கிறது. தேசியவாத சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கொடுத்த மோசடிக் கடிதத்தை அடிப்படையாக வைத்து ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார். இதன்மூலம் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறார்.
பாஜக ஆட்சி அமைப்பதற்கு அவசர அவசரமாகப் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரத் பவார் தலைமையில் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள்.
தற்போது துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவார் மீது, ஏற்கெனவே தேவேந்திர பட்னாவிஸ் அரசு ரூபாய் 70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழலுக்காக வழக்குத் தொடுத்தது. மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் ரூபாய் 25 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாகவும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு 2012-ல் துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊழல் வழக்குகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவிடம் அஜித் பவார் சோரம் போயிருக்கிறார்.
சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் மிகக் கேவலமான உபாயங்களைப் பயன்படுத்தி பாஜக ஊழல்வாதியின் துணையோடு ஆட்சியை அமைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள். இதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை பாஜக களங்கப்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விரோதச் செயலை முறியடிப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சித் தலைவர்கள் கூடிப் பேசி வியூகம் வகுத்துச் செயல்பட்டு வருகின்றனர். பாஜகவின் அச்சுறுத்தலில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கான வியூகத்தையும் வகுத்துள்ளனர்.
எனவே, வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை கோரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு பாஜக ஆட்சி கவிழ வேண்டிய நிலை நிச்சயம் உருவாக இருக்கிறது. இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனநாயகம் காக்கப்பட்டு மீண்டும் நல்லாட்சி அமையும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் மூலமாக நரேந்திர மோடி - அமித் ஷாவின் முகமூடி கிழித்தெறியப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பதவிகளுக்காக பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.