Last Updated : 23 Nov, 2019 05:39 PM

 

Published : 23 Nov 2019 05:39 PM
Last Updated : 23 Nov 2019 05:39 PM

காரைக்குடி நகராட்சியைக் கைப்பற்ற களமிறங்கும் சமூக அமைப்புகள்: பொது வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்ததால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

காரைக்குடி

உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியை கைப்பற்ற சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து பொதுவேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதால் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல்கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக காரைக்குடி உள்ளது. மொத்தம் 36 வார்டுகளுடன் 2013 முதல் சிறப்புநிலை நகராட்சியாக உள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். காரைக்குடியை மாநகராட்சி ஆக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், விரைவில் மாநகராட்சியாக அறிவிக்க வாய்ப்புள்ளது. மேலும் செல்வம் கொழிக்கும் நகராட்சியாகவும் உள்ளது.

இதனால் காரைக்குடி நகராட்சியைக் கைப்பற்ற அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமசாமி எம்எல்ஏவாக உள்ளார். சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் எம்பி கார்த்திசிதம்பரமும் இருப்பதால் காரைக்குடி நகராட்சியைக் கைப்பற்ற திமுக கூட்டணியில் காங்கிரசும் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் பல்வேறு சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு பொதுவேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளன.

இதற்கான முயற்சியில் காரைக்குடி மக்கள் மன்றம் ஈடுபட்டுள்ளது. இதனால் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரைக்குடி மக்கள் மன்றத்தின் செயலாளரும், ஏற்கனவே 2 முறை சுயேச்சை கவுன்சிலராகவும் இருந்த ஆறுமுகம் கூறியதாவது: எங்கள் அமைப்பு மூலம் இறந்தோரை கொண்டு செல்ல குளிர்சாதன பெட்டியை இலவசமாக வழங்குகிறோம்.

தாய், தந்தை இழந்த 300 குழந்தைகளை தத்தெடுத்து கல்விக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.

காரைக்குடி நகர மக்களின் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து அடிக்கடி குரல் கொடுத்து வருகிறோம். இதற்காக 36 குழுக்களை அமைத்துள்ளோம்.

எங்கள் போராட்டத்தால் பல பிரச்சினைகளில் தீர்வு கிடைத்துள்ளதால் மக்களிடம் நன்மதிப்பு உள்ளது. ஆனால் அரசியல் கட்சியினர் எந்த அக்கரையுமின்றி நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில்லை.

இதனால் இந்த முறை எப்படியாவது சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து காரைக்குடி நகராட்சியை கைப்பற்ற முடிவு செய்துள்ளோம். இதற்காக சமூக அமைப்பினர்கள், சமூக ஊடகங்களில் உள்ள சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.

வார்டுவாரியாக கூட்டம் நடத்தி பொதுவேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளோம். இதற்கான கலந்தாய்வு கூட்டம் நவ.24-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது, என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x