

காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில மாவட்டங்களில் மழையும், சில மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்றிரவு தொடங்கி காலை வரை பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் சாலையில் நீர் தேங்கியது. இரவு முழுவதும் மழை பெய்த பின்னர் காலையில் மழை சுத்தமாக நின்றது. ஆனாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதேபோன்று டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:
“பருவமழை காலகட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதகப் போக்கின் காரணமாகவும், காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்,தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் 14 செ.மீ. மழையும், தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு பகுதியில் 9 செ.மீ. மழையும், நாகை நகர்ப்பகுதிகளில் 8 செ.மீ. மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதிகளில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு, அதிகபட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸ் பதிவாகும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.