Published : 23 Nov 2019 05:22 PM
Last Updated : 23 Nov 2019 05:22 PM

இந்தியா வரும் இலங்கை அதிபருக்குக் கண்டனம்: வைகோ தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் 

இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லி வரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தனது தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த ராஜபக்சவின் ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய, இப்போது இலங்கை அதிபர் ஆகி இருக்கின்றார். முன்னாள் அதிபரை பிரதமராக அறிவித்து, அவரிடமே ராணுவப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டார்.

சிங்களர்களால்தான் நான் வெற்றி பெற்றேன் என்றதுடன், முதல் அறிவிப்பாக, தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் தெருக்களில் வலம் வர வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துவிட்டார்.

தமிழ் ஈழம் சிங்களர்களின் ராணுவக் கூடாரம் ஆகிவிட்டது. காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன? என்ற வேதனை நம்மை வாட்டுகின்றது.

இந்தியாவில் எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கின்றோம். அதைத் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இந்தியாவின் மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைத்து, கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்தும் சொல்லி, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருக என அழைப்பும் விடுத்து இருக்கின்றது.

கோத்தபய ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து வருகின்ற நவம்பர் 28-ம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மதிமுக சார்பில், புது டெல்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.

கட்சித்தொண்டர்கள், இந்தக் குறைந்த கால அவகாசத்தில் வர முடிந்தவர்கள், டெல்லிக்கு வாருங்கள். குண்டடிபட்டுக் கொத்துக்கொத்தாக மடிந்து போன ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் சிந்துகின்ற நாம், நம் அறப்போரை மேலும் கூர்மை ஆக்குவோம்’’.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x