

105-ஐ விட 54 பெரிது என நினைத்தவர்களுக்கு சரியான கணிதப் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது என, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த சூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "நிலையான ஆட்சியை தர வேண்டும், உடனடி தேர்தலையும் தவிர்க்க வேண்டும் என்ற இரண்டு குறிக்கோள்களைக் கருத்தில் கொண்டு, பாஜக தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிராவில் அமைந்திருக்கிறது. 105-ஐ விட 54 பெரிது என நினைத்தவர்களுக்கு சரியான கணிதப் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. அடுத்து காங்கிரஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. யாராலும் ஆட்சியமைக்க முடியாததால் தான் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. இதுதான் ஜனநாயக நடைமுறை. அதன் பிறகு தான் பாஜக ஆட்சியமைத்தது," என ஹெச்.ராஜா தெரிவித்தார்.