

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்.
தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். அதிமுகவினர் மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க பார்க்கின்றனர். இதையும் மீறி உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறும். நாளையே கூட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றாலும், அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது" என்றார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்திவந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக விருப்பமனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில், மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றம் செய்து வருகிற தேர்தலில் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அவசரச் சட்டம் இயற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் குறிப்பாக திமுக கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. ஆனால், மறைமுகத் தேர்தல் பற்றி சட்டப்பேரவையில் 2006-ல் ஸ்டாலின் சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம். அவர் சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் தவறா? என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பிவருகிறார்.