

கோவா, கர்நாடகா மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் செய்த ஜனநாயகப் படுகொலையை மகாராஷ்டிராவிலும் பாஜக நிகழ்த்தியுள்ளது. இந்திய ஜனநாயகத்தில் கருப்புப் புள்ளியான சட்டவிரோதமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
“மகாராஷ்டிராவில் முதல்வரும், துணை முதல்வரும் பதவியேற்றுள்ள முறை, பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மிக கீழ்த்தரமான, நெறியற்ற நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடிய கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
பாரபட்சமற்று இயங்க வேண்டிய குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரை தன்னுடைய அதிகார வெறிக்காகப் பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும், சட்டவிதிகளையும் காலில் போட்டு மிதித்து பாஜக செயல்பட்டுள்ளது. மிக கேவலமாக திரைமறைவு, தில்லுமுல்லுகளை மகாராஷ்டிரா அரசியலில் பாஜக அரங்கேற்றியுள்ளது.
ஏற்கெனவே, கோவா, கர்நாடகா மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் செய்த ஜனநாயகப் படுகொலையை மகாராஷ்டிராவிலும் பாஜக நிகழ்த்தியுள்ளது. இந்திய ஜனநாயகத்தில் கருப்புப் புள்ளியாக பாஜக நிகழ்த்தியுள்ள இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.