தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: மகளிரணி மாநாட்டில் கருணாநிதி நம்பிக்கை

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: மகளிரணி மாநாட்டில் கருணாநிதி நம்பிக்கை
Updated on
2 min read

தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமையும் என்று திமுகவின் மதுவுக்கு எதிரான மகளிரணி மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுக மகளிரணி சார்பில் ‘மதுவுக்கு எதிரான மகளிரணி மாநாட்டை சென்னை தாம்பரத்தையடுத்த படப்பை கரசங்காலில் நடந்தது. தமிழகத்தில் மதுவுக்கு எதிரான சூழல் வலுப்பெற்றுள்ள நிலையில் நடக்கும் இந்த மாநாட்டில், திமுக தலைவர் கலந்து கொண்டு பேசினார். திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடந்த இந்த மாநாடு சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் தொடங்கியது. அதில், திமுக மகளிரணியினர் பெருமளவில் பங்கேற்றனர்.

நடக்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூரண மதுவிலக்குக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாசித்தார்.

மதுவுக்கு எதிரான மகளிரணி மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது:

இந்த மாநாடு எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனென்றால், இன்றைக்கு பெண்கள் அரசியலில் நாட்டம் செலுத்துவதில்லை. கோயில், குளம், திருவிழா என்று உள்ளனர். இந்த நிலையில் திமுக நடத்தும் மாநாடு ஓரளவே வெற்றி பெறும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு மாறாக லட்சக்கணக்கான மகளிர் திரண்டு வந்து மாநாட்டை பெரியளவில் வெற்றி பெறச்செய்துள்ளனர்.

திமுக மாற்றார் நினைப்பது போல் சாதாரணமான கட்சி அல்ல. ‘திராவிட’ என்று இனப்பெயரை தனது பெயரில் தாங்கியுள்ள கட்சி. சிலர் திராவிட என்ற பெயரில் கட்சி நடத்துகிறார்கள், அவர்கள் கூறும் திராவிட என்ற சொல்லால் எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் அடுத்து நாம் தான் ஆட்சி அமைப்போம் என்று ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசினர். அது அவர்களின் உறுதியை காட்டுகிறது.

எனினும், நாம் தான் ஆட்சி அமைக்க வேண்டும். தமிழகத்தை காக்க வேறு யாராலும் முடியாது என்கிற வகையில் நாம் தொண்டாற்றிக் கொண்டுள்ளோம். கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் போன்ற தனிப்பட்ட நபர்களால் மட்டுமே திமுக இயங்கவில்லை.

ஏழை எளியவர்கள், வறுமையில் வாடுகிறவர்கள், இந்த நாட்டில் அழுதுக் கொண்டிருக்கிறவர்களை எண்ணி பார்க்கும் போது தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொலைகள், பயங்கரமான கொள்ளைகள் நடக்கின்றன. ஆட்சி நடக்கிறதா என்றால் இல்லை. மக்கள் வாக்களித்து உருவாக்கிய சட்டப்பேரவை இயங்காமல் உள்ளது.

சின்னஞ்சிறு மாநிலங்களும் முன்னேறியுள்ளன. ஆனால் தமிழகம் தற்போது முன்னேறவில்லை. அண்டை மாநிலங்களை நம்பியே நாம் உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் நம்மை காப்பாற்றுமா என்று தெரியவில்லை. எனவே, நமக்கு நாமே என்று செயல்படுகிற சக்தியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாற்றத்தை நோக்கி நடை போட வேண்டும். அப்போது தற்போதைய அரசின் சோதனை, வேதனைகள் மறையும். அதன் மூலமே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததை போல் இப்போதும் பெருமையுடன் வாழ முடியும். தோல்விகள் துரத்தினாலும், சிலர் நம்மிடம் வீராப்பு பேசினாலும் உறுதியுடன் இயக்கத்தை வளர்க்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி பணியாற்ற வேண்டும். தமிழகத்தை காப்பாற்றுவதற்கான ஒரே சக்தி திமுக தான்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

முன்னதாக மாநாட்டில் சிறப்புரையாற்றிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “மதுவுக்கு எதிரான போராட்டம் திமுகவுக்கு புதிதல்ல. 5 வயது பெண்களுக்கும் தந்தையின் பங்கு உண்டு என்ற நிலையை ஏற்படுத்தியவர் கருணாநிதி தான். பெண்களின் உரிமைக்காக போராடிய இயக்கம் என்றால் அது திமுக தான்.இந்நிலையில் மதுவால் பாழ்பட்டுள்ள தமிழகத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் போராடுகிறோம். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். நிச்சயம் 2016-ல் திமுக ஆட்சி தான் அமையும்” என்று பேசினார்.

இந்த மாநாட்டில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள் தா.மோ.அன்பரசன், க.சுந்தர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in