

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என, மகாராஷ்டிர அரசியல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த சூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (நவ.23) தன் முகநூல் பக்கத்தில், "மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது?
ஜனநாயகப் படுகொலை என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ? நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? பாஜக சித்து விளையாட்டு என்பதா?
இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு," என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.