

சரத் பவார் தன் முடிவுரையை எழுதிவிட்டார் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த சூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இது ஓரிரவில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. நான்கு தினங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. சரத் பவாருக்கு தனது வாழ்வின் அல்லது அரசியலின் இறுதிக் காலத்தில் அதிகாரம் தேவைப்படுகிறது. ஓர் அரசாங்கத்தை எப்படியாவது அமைக்க வேண்டும் என அவர் முயற்சி செய்தார்.
காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க அவர் முயற்சிகள் எடுத்தபோது, சோனியா காந்தி சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கம் காட்டினார். துணை முதல்வர், அமைச்சர்கள் பதவிக்காக மதச் சார்பின்மையை விட்டுக்கொடுக்க முடியுமா? நீண்டகாலமாக மகராஷ்டிராவில் சிவசேனாவுடன் தான் காங்கிரஸ் போராடி வருகிறது. அடிநிலைத் தொண்டர்களின் அடிப்படைக் கருத்தே சிதைந்துவிடும் என்ற அச்சம் காங்கிரஸுக்கு இருந்தது.
ஆனால், பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்ற பவாரின் கோரிக்கையை ஏற்று கடைசியாக ஒரு கோரிக்கையை வைத்தார்கள். குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதில், மதச்சார்பின்மை என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியது. அமையவிருக்கும் அரசாங்கம் மதச் சார்பின்மை அரசாங்கமாக செயல்படும் என்ற வார்த்தையைச் சேர்த்தால், ஆதரிப்பதில் பிரச்சினையில்லை என காங்கிரஸ் கூறியது.
சிவசேனாவைப் பொறுத்தவரை, காங்கிரஸுக்கு இன்னும் 2 அமைச்சர்கள் கொடுப்பதற்குக் கூட தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்களின் மதவாதம் தான் அவர்களுக்குப் பிரச்சினை. மதச்சார்பற்ற என்ற வார்த்தையைச் சேர்த்தால் அவர்களுக்குப் பிரச்சினை வரும் என யோசித்தார்கள். இந்த யோசனை நீண்டு கொண்டிருக்கும் நேரத்தில், உடனடியாக சரத் பவார் ஒரு முடிவு செய்தார். அவர் எப்போதுமே இதுபோன்ற தவறுகள் செய்து, சந்தர்ப்பவாதமாக நடந்து அரசியலில் மேலே வந்தவர். காங்கிரஸிலும் அப்படி செய்துதான் வெளியே வந்து அரசியலில் உயர்ந்தார். அவருக்கு எப்படியாவது ஓர் அரசாங்கம் தேவை.
மூன்று தினங்களுக்கு முன், தேசியவாத காங்கிரஸை பிரதமர் புகழ்ந்தார். அந்தப் பாராட்டிலேயே சரத் பவார் பணிந்துவிட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவேதான் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை. அதன் அடிப்படையில் சரத் பவார் பாஜகவுடன் சேர்ந்திருக்கிறார். இதன்மூலம், மோடி தன் மீது கறையைப் பூசிக்கொண்டார். சரத் பவார் மீது ஏற்கெனவே கறை இருக்கிறது. இதன்மூலம், மேலும் அதிகமாக அவர் மீது ரத்தக்கறை படிந்துவிட்டது.
மகாராஷ்டிர மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். போராடி வெற்றி பெற்று ஒருவர் ஆட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்து ஆட்சியமைத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதன்மூலம், சரத் பவார் தன்னுடைய முடிவுரையை எழுதியிருக்கிறார் என சுட்டிக்காட்டுகிறேன்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.