Published : 23 Nov 2019 11:58 AM
Last Updated : 23 Nov 2019 11:58 AM

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்; ராமதாஸ்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (நவ.23) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக்குழு நிர்ணயித்துள்ளது. இது மிகவும் குறைவான கட்டணம் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் செய்திகள் பரப்பப்படும் நிலையில், உண்மையில் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ள கட்டணம் மிகவும் அதிகமாகும். இது ஏழை, நடுத்தர மாணவர்களை சுரண்டுவதற்கே வழி வகுக்கும்.

இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி தனியார் கல்லூரிகளில் உள்ள 50% மருத்துவப் படிப்பு இடங்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.8 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.30 லட்சம் வரை வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 50% இடங்களுக்கு கல்லூரி நிர்வாகமே விருப்பம் போல கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் சலுகை காட்டப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தான் பயனளிக்குமே தவிர மக்களுக்கு பயனளிக்காது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்களை மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு தான் நிர்ணயித்து வந்தது. தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 35% இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சமும், நிர்வாக இடங்களுக்கு ரூ.12 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது ஒப்பீட்டளவில் மிகக் குறைவான கட்டணமாகும்.

ஆனால், 50% இடங்களுக்கு இந்திய மருத்துவக் குழு, தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. அதேபோல், மீதமுள்ள 50% இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே விருப்பம் போல கட்டணம் நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதால், அத்தகைய இடங்களுக்கு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம். இதுவும் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவர்.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 3 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.11.50 லட்சமும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. ஆனால், இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்திருக்கும் கட்டணம் சராசரியாக ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஆகும். இந்திய மருத்துவக் குழுவின் கட்டண பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது. அதன்பின் பணம் படைத்தவர்கள் மட்டும் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடும்.

கட்டண நிர்ணயத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள், இப்போது இந்திய மருத்துவக் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் தான்.

இந்த சட்டத்தின்படி தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளிடமிருந்து இந்திய மருத்துவக் குழுவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஓர் சீர்திருத்தம் செய்யப்பட்டால், அது மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைய வேண்டும். ஆனால், மருத்துவக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த சீர்திருத்தம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதுடன் மட்டுமின்றி, ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகளையும் அடியோடு சிதைத்துள்ளது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தான் மருத்துவப் படிப்புக்காக கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன. மருத்துவப் படிப்பு வணிகமயமாக்கப்பட்டிருப்பதற்கு இது தான் முதன்மைக் காரணம். கல்விக்கட்டண சீர்திருத்தங்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிடமிருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.

எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதேபோல், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுவதுடன், அனைத்து இடங்களும் 69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி மாநில அரசின் மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பட வேண்டும்.

அத்துடன், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x