

ஒரு மாதம் பரோலில் வந்துள்ள பேரறிவாளன் தனது சகோதரியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மாலை கிருஷ்ணகிரி செல்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தனது தந்தையை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக, கடந்த 12-ம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார். இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தாருடன் பேரறிவாளன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், பேரறிவாளனின் சகோதிரி அன்புமணியின் மகள் செவ்வை என்பவருக்கும், திருப்பத்தூர் அடுத்த ஏ.கே.மோட்டூரைச் சேர்ந்த சின்னதம்பி - கல்யாணி தம்பதியின் மகன் கவுதமன் என்பவருக்கும் நாளை (24-ம் தேதி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, இன்று மாலை நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், நாளை காலையில் நடைபெற உள்ள திருமணத்திலும் பேரறிவாளன் கலந்து கொள்கிறார்.
இதற்காக, பேரறிவாளன் இன்று மாலை கிருஷ்ணகிரிக்கு செல்கிறார். இதையொட்டி, காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, " ஒரு மாதம் பரோலில் வந்துள்ள பேரறிவாளனின் தனது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமையில், ஒரு காவல் ஆய்வாளர், 2 உதவி காவல் ஆய்வாளர்கள், 7 காவலர்கள் பாதுகாப்புப்பணிக்காக பேரறிவாளனை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு செல்கின்றனர்.
இன்று (23-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு ஜோலார் பேட்டையில் இருந்து தனி வாகனம் மூலம் கிருஷ்ணகிரி திருமண மண்டபத்துக்கு பேரறிவாளன் கொண்டு செல்லப்படுகிறார். அங்கு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர், இரவு 9 மணிக்கு கிருஷ்ணகிரியிலிருந்து புறப்பட்டு மீண்டும் ஜோலார் பேட்டைக்கு வருகிறார். திருமண மண்டபத்தில் இரவு தங்க அனுமதியில்லை.
இதையடுத்து, நாளை (24-ம் தேதி) காலை மீண்டும் திருமணத்துக்காக பேரறிவாளன் கிருஷ்ணகிரிக்கு சென்று அங்கு திருமணம் முடிந்ததும், அடுத்த சில மணி நிமிடங்களில் மீண்டும் அவர் ஜோலார்பேட்டைக்கு கொண்டு வரப்படுவார்.
திருமண நிகழ்ச்சியில் உறவினர்களை தவிர, வேறு யாரிடம் பேரறிவாளன் பேசவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதியில்லை" என்றனர்.