

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, பவானிசாகர் அணை நீர்மட்டம் கடந்த 15 நாட்களாக 105 அடியாகத் தொடர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில், 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியது.
கடந்த 3-ம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 104.20 அடியாக உயர்ந்தது. இதனால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணைக்கான நீர் வரத்து குறைந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதாலும் அணை தனது முழு கொள்ளளவை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
வாய்க்கால் உடைப்பு
இந்நிலையில் கடந்த 7-ம் தேதியன்று சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் உள்ள சுள்ளித்தோட்டம் என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்காலின் இடதுபுற கரை உடைந்து நீர் வெளியேறியது. இதனால் கீழ்பவானி பாசனத்துக்கு திறக்கப்பட்ட 2300 கனஅடி நீர் நிறுத்தப்பட்டது. அணைக்கான நீர் வரத்து தொடர்ந்த நிலையில், பாசனத்துக்கு நீர் திறக்கப்படாததால் 8-ம் தேதி இரவு பவானிசாகர் அணை நிரம்பியது.
அதன் தொடர்ச்சியாக கீழ்பவானி வாய்க்கால் கரை சரிசெய்யப்பட்ட நிலையில், அதில் நீர் திறக்கப்பட்டதாலும், அணைக்கான நீர் வரத்து குறைந்ததாலும் சிறிதளவு நீர் மட்டம் குறைந்தது. ஓரிரு நாட்கள் மட்டுமே இந்த நிலை நீடித்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணை மீண்டும் தனது முழுக் கொள்ளளவை எட்டியது.
அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்தது போக, 10 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த 8-ம் தேதி முதல் நேற்று (22-ம் தேதி) வரையிலான 15 நாட்களும் அணை நிரம்பிய நிலையில் தொடர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 105 அடியாகவும், நீர் இருப்பு 32.80 டிஎம்சியாகவும் தொடர்கிறது. அணைக்கு விநாடிக்கு 3687 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2100 கன அடியும், பவானி ஆற்றில் 1600 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.