

திருப்பூரில் நேற்று நடைபெற இருந்த டாஸ்மாக் மதுக் கடை ‘பார்’ ஏலமானது பல்வேறு குளறுபடிகள் காரணமாக நடைபெறவில்லை. விரைவில் ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 236 டாஸ் மாக் மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ‘பார்’களுக்கான ஏலம் கடந்த 11-ம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் 22-ம் தேதிக்கு ஏலத்தை மாற்றி டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, ‘பார்’ ஏலம் எடுப் பதற்காக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் பலர் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்தனர்.
முறைப்படி பகல் 12 மணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்படும், பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிற்பகல் 2 மணியளவில் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட வேண்டும், அடுத்து 3 மணிக்கு ஏலம் தொடங்குவது நடைமுறை என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் நேற்று டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளர் லூர்துசாமி ஏலம் விடும் இடத்துக்கு வரவில்லை. பணி காரண மாக கோவை சென்று விட்டதாக தெரி விக்கப்பட்டது. இதனால் விண்ணப்பங் களும் வழங்கப்படாததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் ஒருசிலர் மட்டும் விண்ணப்பங் களுடன் உள்ளே சென்று வந்துள்ளனர். இதனால் காத்திருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதை போலீஸார் விசாரிக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், மாநகர காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.
சட்டப்பேரவை உறுப்பினர், காவல் துறையினர் முன்னிலையில் அலுவலகத் தில் இருந்த சந்தேகத்துக்குரிய பீரோவில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் முறைகேடாக பெறப்பட்ட 25-க்கும் மேற்பட்ட ‘பார்’களுக்கான விண்ணப்பங் கள் இருந்தன. அது குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் போலீஸார் விசாரித்த போது, ‘மதிய உணவுக்கு சென்ற நேரத் தில் யாரோ மர்ம நபர்கள் வைத்து சென்றுள் ளனர். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வந்தால் மட்டுமே ஏலம் நடைபெறும். கைப்பற்றப்பட்ட விண்ணப்பங்கள் மோசடியாக வைக்கப்பட்டவை’ என விளக்கமளித்தனர்.
இது குறித்து சு.குணசேகரன் எம்எல்ஏ விடம் கேட்டபோது, ‘‘பார் ஏலத்துக்கு நீண்ட நேரமாகியும் விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை என தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று பார்த்து, முறைகேடாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காவல் துறையினர் உதவியுடன் கண்டறிந்தேன். ஏலத்தை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும். முறைகேடு நடைபெற்றால் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வேன். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்”என்றார்.
ஏலம் எடுக்க வந்தவர்கள் தரப்பில் விசாரித்தபோது, “வழக்கமாக டாஸ்மாக் ‘பார்’ ஏலத்தில் ஆளுங்கட்சியினரே ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். தற்போதும் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக மற்ற நிர்வாகிகள் சிலர் கருதுவதால் ஏலத்தில் குழப்பம் நீடிக்கிறது” என்றனர்.
டாஸ்மாக் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “மாவட்ட மேலாளருக்கு ஏலத்தை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. இன்று (நேற்று) ஏலம் நடைபெறவில்லை. அது பற்றிய அறிவிப்பு கள் பிறகு வரும்” என்றனர்.