

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தற்போது மதுவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள், பெண்கள் அமைப்புகள் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அதிமுக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆக.10-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் பஜார் வீதியில் எஸ்.சுதர்சனம் தலைமையிலும், கிழக்கு மாவட்டம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே பி.கே.சேகர் பாபு தலைமையிலும், மேற்கு மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஜெ.அன்பழகன் தலைமையிலும், தெற்கு மாவட்டம் சார்பில் சோழிங்கநல்லூரில் மா.சுப்பிரமணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதேபோல், தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.