Published : 23 Nov 2019 09:49 AM
Last Updated : 23 Nov 2019 09:49 AM

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மதுரை

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நாகை கீழ்வேளூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 2012-ல்பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை குவாரியில் வீசிய வழக்கில் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் (எஸ்சி, எஸ்டி நீதிமன்றம்) 13.6.2015-ல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஈஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கொலையைவிட கொடூரமானது

கொலைக் குற்றத்தைவிட பாலியல் குற்றங்கள் கொடூரமானது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவர், வாழ்நாள் முழுவதும் அந்த கொடூரமான நிகழ்வின் நினைவுகளுடன் வாழ வேண்டியது வரும்.

தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காளான்கள்போல் பெருகி வருகின்றன. இந்த குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதே தெரியாமல் வலி மற்றும் வேதனைக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் அச்சத்தை உருவாக்கும் வகையில் உள்ளன.

வளைகுடா நாடுகளில் கடும் தண்டனை

வளைகுடா நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத தண்டனை வழங்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பாலியல் குற்றவாளி, சம்பவம் நடைபெற்று 4 நாட்களில் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

எகிப்து, ஈரானில் தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் பாலியல் குற்றவாளிகள் பொது இடத்தில் நிறுத்தி கல்லால் அடித்துக் கொல்லப்படுகின்றனர். இந்த முறையில் குற்றவாளி அனைத்து வலி மற்றும் கொடுமைகளை அனுபவித்து மரணத்தை தழுவுகிறார்.

மகாத்மா காந்தி, சாலையில் ஒரு பெண் இரவில் தனியாக நடந்து செல்லும் நாள்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுவேன் என்று கூறினார். காந்தியின் கருத்தின்படி இந்தியாவில் தற்போது பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்காவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காது.

இந்த வழக்கில் மனுதாரருக்கு தூக்குத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும். நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாமல் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மனுதாரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இதனால் தூக்கு தண்டனைக்குள் செல்ல விரும்பவில்லை. மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறிஉள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x