

சென்னை
கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டு காலில் இருந்து டைட்டேனியம் கம்பி அகற்றப் பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலை வர் கமல்ஹாசனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் வலது காலில் முறிவு ஏற்பட் டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. இந்நிலையில் அந்தக் கம்பியை அகற்றுவதற்காக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனை யில் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் நேற்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, காலில் இருந்த டைட்டேனியம் கம்பியை வெற்றிகரமாக அகற்றினர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து 3 அல்லது 4 நாட்களில் கமல்ஹாசன் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேற்று சென்று கமல்ஹாசனிடம் நலம் விசாரித்தனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கமல்ஹாசனுக்கு நடந்த அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது. கமல்ஹாசன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.