அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது
Updated on
2 min read

சென்னை

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் அவைத்தலைவர் இ.மது சூதனன் தலைமையில் நாளை வானகரத்தில் நடைபெறுகிறது.

முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவர் மறைவைத் தொடர்ந்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில், தற்காலிக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வானார். அதன்பின் அவர் பொதுச்செயலாளராக டிச.31-ம் தேதி பொறுப்பேற்றார்.

அதைத் தொடர்ந்து, முதல்வராவதற்கு சசிகலா முயற்சிஎடுத்தார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை விட்டு விலகினார். இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதால் அதிமுகவில் பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணி என உருவாகின. இதனால் இரட்டை இலை சின்னமும், கட்சிக் கொடியும் முடக்கப்பட்டன. கட்சிக் கொடியையும், சின்னத்தையும் மீட்பது என்று முடிவெடுத்து 2017 ஆகஸ்ட்டில் இரு அணிகளும் இணைந்தன. அதன்பின், செப்.12-ம் தேதி அதிமுக பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 2,130 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அத்துடன்,சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி.தினகரன் உள்ளிட்டோரது நியமனங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

அத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவி மறைந்தஜெயலலிதாவுக்கு நிரந்தரமாகவழங்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதன்பின், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை சின்னமும், கட்சிக் கொடியும் மீட்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கஜா புயல் காரணமாக நடத்தப்படவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை (நவ.24) நடைபெறுகிறது.

அதிமுகவில் அணிகள் இணைந்தபின் நடைபெறும் 2-வது பொதுக்குழு கூட்டமான இதில், தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலங்களின் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என 370-க்கும் மேற்பட்டோர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பொதுக்குழுக் கூட்டத்தை பொறுத்தவரை, அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 2,700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள். இதுதவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து தினகரனின் அமமுகவுக்கு சென்றவர்களில் பலர் மீண்டும் அதிமுகவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களுக்கு பதவி வழங்குவது. கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்களை நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து இந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in