Published : 23 Nov 2019 08:16 AM
Last Updated : 23 Nov 2019 08:16 AM

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2,000 புதிய பேருந்துகள்: போக்குவரத்து துறை செயலர் தகவல்

கோப்புப் படம்

சென்னை

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.600 கோடியில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என போக்குவரத்து துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்து துறை செயலர் டாக்டர் பி.சந்திரமோகன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் கடந்த 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், சென்னை, விழுப்புரம், கோவை உட்பட 8 போக்குவரத்து கழகங்களை சேர்ந்த நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர். சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது, போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள், செலவினங்கள், நிதி ஆதாரங்களை மேம்படுத்துதல் ஊழியர்களின் பதவி உயர்வு, பழைய பேருந்துகள் நீக்குவது, பேருந்துகளின் இயக்கம் மற்றும் வருவாய் உள்ளிட்டவை குறித்து இதில் விரிவாக பேசப்பட்டன.

இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலர் பி.சந்திரமோகன் பேசியதாவது:போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,442 கோடி செலவில் 4,802 பதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஏசி, படுக்கை, கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றைக் கொண்ட புதிய வகை பேருந்துகளும் இதில் அடங்கும். அரசு பேருந்துகளை நல்ல முறையில் பராமரித்து வருவாயை பெருக்கிட வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் ரூ.600 கோடியில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதேபோல், 10 போக்குவரத்து பணிமனைகள் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.1,912 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6,283 பணியாளர்களுக்கு ரூ.1,093 கோடியில் ஓய்வூதிய பணப்பயன்களை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்துள்ளார்.

பணியாளர் தங்கும் அறைகள்

தமிழகம் முழுவதும் 321 பணிமனைகளில் பணியாளர்கள் தங்கும் அறைகளில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள 33 பணிமனைகளில் 16 பணிமனைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படஉள்ளன. அரசு பேருந்துகளில் மாற்றுதிறனாளிகள் பயணம் செய்யும் வகையில் அதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 525 மின்சார பேருந்துகளை வாங்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் 10,000 புதிய பேருந்துகள், 2,000 மின்சார பேருந்துகளை ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் வாங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப ஊழியர்களின் கோரிக்கையை கேட்டறிந்து நிர்வாக இயக்குநர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x