Published : 23 Nov 2019 08:14 AM
Last Updated : 23 Nov 2019 08:14 AM

ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளுக்காக 17 மண்டலங்களுக்கு ஒதுக்கியதில் ரூ.1,009 கோடி தேக்கம்: திட்டப்பணிகள் முடிப்பதில் தாமதம்; முதல் இடத்தில் தெற்கு ரயில்வே

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், 2017, 2018-ம் ஆண்டுகளில் ரயில்வே துறை ஒதுக்கிய மொத்த தொகையில் ரூ.1,009 கோடி செலவிடப்படாமல் தேங்கியுள்ளது.

இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளைக் காட்டிலும் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் 811 கோடியாக இருந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை தற்போது 844 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு, இதற்காக மத்திய பட்ஜெட்டில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு ரயில் நிலையங்களில் இருக்கைகள், மின்விளக்குகள், கழிப்பிட வசதி, லிஃப்ட், எஸ்கலேட்டர் அமைப்பது, சிசிடிவி கேமரா பொருத்துவது, ஓய்வறைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், பேட்டரி வாகன வசதி, சுரங்கப்பாதைகள், நடைமேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இப்பணிகள் ரயில்வே மண்டலங்களில் மெத்தனமாக நடப்பதால், இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை முழுமையாக செலவிடப்படாமல் இருக்கிறது. அந்த வகையில், கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மொத்தமுள்ள 17 மண்டலங்களில் ரூ.1,009 கோடி வரை தேங்கியிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

நடைமுறை சிக்கல்கள்

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. பயணிகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறோம். கடந்த 2016-ம் ஆண்டு வரை ரயில்வே ஒதுக்கீடு செய்த தொகையை விட, கூடுதலாகவே செலவிட்டுள்ளோம். அதாவது, 2016-ல் ரூ.917 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ரூ.981 கோடிசெலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக பணியில் உள்ள சில நடைமுறை சிக்கல்களால் தொகையை முழுமையாக செலவிட முடியவில்லை.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத் போன்ற பெரிய நகரங்களில் ரயில்களின் இயக்கம் முக்கியமானதாக இருக்கிறது. பயணிகளைப் பாதிக்காத வகையில் இரவு நேரங்களில் அல்லது விடுமுறை நாட்களில் மட்டுமே ரயில்களின் சேவையில் சிலவற்றை ரத்து செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டிஉள்ளது. இதனால், திட்டப்பணிகளை உடனுக்குடன் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர, பல்வேறு அலுவலகப் பிரிவுகளில் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதால் பணிகளைத் துரிதப்படுத்த முடியவில்லை. இருப்பினும், இந்த பணிகளுக்காக ஒதுக்கிய தொகையை வேறு பணிகளுக்கு பயன்படுத்த மாட்டோம். பயணிகளின் அடிப்படை வசதியை மேம்படுத்த இந்த தொகையை படிப்படியாக தொடர்ந்து பயன்படுத்துவோம்’’ என்றனர்.

தெற்கு ரயில்வேயில் தேக்கம் அதிகம்

பயணிகளுக்கான நிதியை பெரும்பாலான ரயில்வே மண்டலங்கள் கணிசமாகப் பயன்படுத்தியுள்ளன. குறிப்பாக, மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு - கிழக்கு மண்டலங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை தாண்டி கூடுதலாக நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில்வேயில்தான் அதிக அளவுக்கு நிதி பயன்படுத்தாமல் இருக்கிறது. கடந்த 2017-ல் ரூ.46 கோடியும், 2018-ல் ரூ.90 கோடியும், 2019-ம் ஆண்டு அக்டோபர் வரை ரூ.2,000 கோடிக்கு பயன்படுத்தாமல் இருப்பதாக ரயில்வே துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

17 மண்டலங்களுக்கும்ஆண்டு வாரியாக ரயில்வே துறை ஒதுக்கிய தொகை விவரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x