Published : 22 Nov 2019 09:07 PM
Last Updated : 22 Nov 2019 09:07 PM

முரசொலி நிலம் விவகாரம்; மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு: ராமதாஸ், சீனிவாசனுக்கு திமுக நோட்டீஸ்

முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தாழ்த்தபட்டோர் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக செயலாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடருவோம் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தைப்பார்த்துவிட்டு பஞ்சமி நில மீட்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலத்தில்தான் அதை திருப்பித்தருவார்களா? என கேள்வி எழுப்பினார்.

முரசொலி நிலம் இருப்பது பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன், நிரூபிக்காவிட்டால் ராமதாஸும், அன்புமணியிம் அரசியலை விட்டு விலகத்தயாரா? என ஸ்டாலின் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தை கையிலெடுத்த அதிமுக, பாஜகவினரும் விமர்சிக்கத்தொடங்கினர். சமூக வலைதளங்களில் ஆதரவாக எதிர்ப்பாக பெரிய அளவில் விவாதம் நடந்தது.பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முரசொலி பஞ்சமி நிலத்தில் உள்ளது என புகார் அளித்தார்.

இதையடுத்து பஞ்சமி நிலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் உரிய ஆவணங்களுடன் வருக என முரசொலை அறக்கட்டளை அறங்காவலர் தலைவர் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பினார் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் சம்மன் அனுப்பினார்.

ஆணையம் முன் ஆஜரான அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி ஆணையம் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரமே இல்லை என்று தெரிவித்ததாக பேட்டியளித்தார். ஒருவர் மீது புகார் அளித்தால் இந்திய சாட்சியங்கள் சட்டப்படி அவரிடம் ஆதாரம் இருக்கவேண்டும். சீனிவாசன் எங்கள்மீது புகார் அளித்தார், ஆனால் அவரால் ஆதாரத்தை சமர்ப்பிக்க இயலவில்லை, வாய்தா கேட்கிறார்.

அரசுக்கு சம்மன் அனுப்பினார்கள், அவர்களும் வாய்தா வாங்கியுள்ளார்கள். அரசு நினைத்தால் ஒரு மணி நேரம் போதும் அது பஞ்சமி நிலமா இல்லையா என்பதை எடுத்துவிடமுடியும்.

ஆகவே ஆதாரம் இல்லாமல் புகார் அளிக்கிறார்கள். அதனால்தான் ஆணையரிடம் உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னோம். நீங்கள் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு, அதற்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை எல்லாம் கொடுத்தோம்” எனப் பேட்டி அளித்தார்.

இந்த விவகாரத்தை முதலில் கிளப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆணையத்தில் புகார் அளித்த சீனிவாசன் இருவர்மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, முரசொலி அறங்காவலரும், தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி சார்பாக வழக்கறிஞர் நீலகண்டன் இன்று நோட்டீஸ் அனுப்பினார்.

ராமதாஸ், முரசொலி இடம் குறித்து, தான் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும், வருங்காலத்தில் இது போன்ற அவதூறான பதிவுகளைப் பதிவிடக்கூடாது என்றும் நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதியால் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும், அவதூறு குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும், வழக்கறிஞர் நீலகண்டன் அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று பாஜக சீனிவாசனுக்கும் இதே விபரங்களுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x