முதல்வர் கருத்தை தவறாகச் சித்தரிக்கின்றனர்: நாராயணசாமியைச் சந்தித்த திருநங்கைகள் விளக்கம்

நாராயணசாமியை சந்தித்த திருநங்கைகள்
நாராயணசாமியை சந்தித்த திருநங்கைகள்
Updated on
1 min read

புதுச்சேரியை திருநங்கைகளோடு ஒப்பிட்டு முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து திருநங்கைகள் அவரை சந்தித்துப் பேசினர்.

முதல்வர் நாராயணசாமி, நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், "ஜிஎஸ்டி, சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வருவாயை மத்திய அரசு பெறும் போது புதுச்சேரியை மாநிலமாக கருதுகிறது. அதேபோல் மக்கள் நலத்திட்ட நிதிகள் ஒதுக்கீட்டின்போது யூனியன் பிரதேசமாக கருதுகிறது. இதற்கு எங்களை 'திருநங்கை' என அறிவித்து விடுங்கள்,"என்று பேசினார்.

முதல்வர் நாராயணசாமியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று (நவ.21) 'சகோதரன்' சமூக நல மேம்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் முதல்வரைச் சந்தித்தனர்.

இதையடுத்து, 'சகோதரன்' சமூக நல மேம்பாட்டு இயக்கம் ஷீத்தல் கூறுகையில், "முதல்வரின் கருத்தை தவறாகச் சித்தரிக்கின்றனர். புதுச்சேரி மத்திய அரசின் மூலமாக மாநிலமும் அல்லாமல் யூனியன் பிரதேசமும் இல்லாமல் திருநங்கைகள் சமூகத்தை இந்த நாடு எவ்வாறு ஒதுக்கி வைத்துள்ளதோ அதேபோல புதுச்சேரியையும் ஒதுக்கி வைத்துள்ளது என்பதை முதல்வரின் கருத்தாகப் பார்க்கிறோம்.

உச்ச நீதிமன்றம் பல்வேறு உரிமைகளை திருநங்கைகள் சமூகத்திற்கு அளித்தும் அந்த சமூகத்திற்கான விடுதலை கிடைக்கவில்லை. அதேபோல புதுச்சேரி மக்களின் நிலையும் உள்ளது. புதுச்சேரி மக்களின் விடுதலையும் திருநங்கைகளின் விடுதலையையும் முதல்வர் கருத்தால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாகவே உணர்கிறோம்.

மத்திய அரசு புதுச்சேரியை நடத்துவது போல் இல்லாமல் எங்கள் துன்ப நிலை உணர்ந்து தனது அதிகாரத்தை வைத்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மாற்றித்தர வேண்டும் என்று குறிப்பிட்டு முதல்வரிடம் மனு தந்தோம்" என்றார்.

அதைத் தொடர்ந்து திருநங்கைகளின் கோரிக்கைகளைக் கேட்ட முதல்வர், திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டா தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in